ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி பெர்த்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை டிஎல்எஸ் விதிமுறைப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. மழையால் 26 ஓவர்களாக நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 136/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக கே.எல் ராகுல் 38, அக்சர் பட்டேல் 31, நித்திஷ் ரெட்டி 19* ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக டிஎல்எஸ் விதிமுறைப்படி 26 ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியாவை கேப்டன் மார்ஷ் 46*, ஜோஸ் பிலிப் 37*, மாட் ரென்ஷா 21* ரன்கள் அடித்து 21.1 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர்.
மாஸ்டர் விராட் கோலி:
முன்னதாக அந்தப் போட்டியில் 224 நாட்கள் கழித்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக 500வது போட்டியில் விளையாடி சாதனை படைத்தார். ஆனால் அந்த சாதனைப் போட்டியில் அவர் 8 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்
அடுத்து வந்த விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டிகளில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அவர்களுடைய மோசமான ஆட்டம் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் அமைந்தது. அதனால் 7 மாதங்களுக்குப் பின் விளையாடும் அவர்கள் ஃபார்மை இழந்து விட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அர்ஷ்தீப் நம்பிக்கை:
இந்நிலையில் விராட் கோலி போன்றவருக்கு ஃபார்ம் என்பது வெறும் வார்த்தை மட்டுமே என்று இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். எனவே தம்முடைய அனுபவத்தைப் பயன்படுத்தி அடுத்த 2 போட்டிகளில் விராட் கோலி இந்தியாவுக்காக பெரிய ரன்கள் குவிப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஃபார்ம் என்பது விராட் கோலிக்கு வெறும் வார்த்தையாகும்”
இதையும் படிங்க: ஐசிசி மகளிர் உ.கோ: வெறும் 4 ரன்ஸ்.. கையிலிருந்த வெற்றியை சோக் செய்த இந்தியா.. நாக் அவுட்டானதா?
“ஏனெனில் இந்தியாவுக்காக 300க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு எப்படி தொடர்ந்து செல்ல வேண்டும் என்பது தெரியும். அவருடன் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆசிர்வாதமாகும். முன்னோக்கி செல்கையில் இத்தொடரில் அவர் நிறைய ரன்கள் அடிப்பார்கள் என்று நான் கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மாஸ்டராக செயல்பட்டுள்ளார். அதைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை வேண்டுமானால் அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் நீங்கள் கேளுங்கள்” என்று சொன்னார்.



