இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு பதில் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2027 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் 3 வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது அசாத்தியமானது என்பதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அகர்கர் தெரிவித்துள்ளார். அந்த முடிவால் இன்னும் 6 மாதத்திற்கு பின் சூரியகுமார் யாதவ் டி20 கேப்டனாக நீடிக்க மாட்டார் என்பது தெரிய வருகிறது. ஏனெனில் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் 3 கேப்டன்கள் இருப்பதை விரும்பவில்லை என்று அகர்கர் தெரிவித்துள்ளார்.
5 மாதம் மட்டுமே:
அந்த வகையில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் இந்திய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள சுப்மன் கில் சமீபத்தில் டி20 அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது பற்றி அகர்கர் நேற்று தெரிவித்த கருத்து பின்வருமாறு. “3 வெவ்வேறு ஃபார்மட்டுக்கு 3 கேப்டன்கள் இருப்பது மிகவும் அசத்தியமானது. தேர்வாளர்கள் மட்டுமின்றி பயிற்சியாளரும் 3 வெவ்வேறு கேப்டனுடன் திட்டங்களை வகுப்பது மிகவும் கடினமாக இருக்கும்” என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து சூரியகுமார் தலைமையில் இந்திய அணி வரும் பிப்ரவரி மாதம் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. அத்தொடரில் இந்தியா கோப்பையை வென்றாலும் வெல்லாவிட்டாலும் அதுவே டி20 கேப்டனாக சூரியகுமார் விளையாடும் கடைசி தொடராக இருக்கும். ஏனெனில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவையே கழற்றி விட்ட தேர்வுக்குழுவுக்கு சூரியகுமாரை கழற்றி விடுவது கடினமானதல்ல.
காலியாகும் சூரியகுமார் கேப்டன்ஷிப்:
சொல்லப்போனால் தற்போது 35 வயது நிரம்பியுள்ள சூரியகுமார் அடுத்த வருடம் 36 வயதை தொட்டு விடுவார். எனவே வயதை காரணமாக வைத்து சூரியகுமாரை கழற்றி விட்டு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்படுவதற்கு 100% வாய்ப்புள்ளது. மொத்தத்தில் அடுத்த வருடம் முதல் சுப்மன் கில் 3 வகையான இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதை ரசிகர்கள் பார்க்க முடியும்.
இதையும் படிங்க: ஆஸி தொடரில் ஜடேஜா கழற்றி விடப்பட்டது ஏன்? பும்ராவை செலக்ட் பண்ணாதது ஏன்? அகர்கர் பேட்டி
அதே போல இந்த முடிவால் ரோஹித் சர்மா, விராட் கோலி 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதிலும் வரும் ஆஸ்திரேலிய தொடருடன் விராட், ரோஹித் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக செய்தி காணப்படுகிறது. ஒருவேளை அவர்கள் ஓய்வு பெற்றால் அது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.



