இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்து அசத்தியது. குறிப்பாக கடைசிப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதை மறக்க முடியாது. அந்தத் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.
குறிப்பாக 4வது போட்டியில் ஜடேஜாவுடன் சேர்ந்து இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றிய சுந்தர் தனது முதல் சதத்தை அடித்தார். கடைசி போட்டியில் அவர் அடித்த 4 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் தான் இந்தியாவின் மிராக்கள் வெற்றியின் வித்தியாசமாக இருந்தது. இது போக 7விக்கெட்டுகளையும் எடுத்து அவர் அஸ்வினுக்கு அடுத்து நல்ல ஸ்பின் ஆல் ரவுண்டராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.
எதிரணியில் அடித்த கம்பீர்:
முன்னதாக 2017ஆம் ஆண்டிலேயே இந்திய அணிக்கு அறிமுகமான சுந்தர் காயத்தால் தொடர்ச்சியாக விளையாடவில்லை. அதே போல காயத்திலிருந்து குணமடைந்து வந்த போது அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக வந்தது முதல் சுந்தருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறார் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தம்முடைய ஆரம்பக் காலங்களில் கௌதம் கம்பீர் எதிரணி பேட்ஸ்மேனாக தம்மை அதிரடியாக விளையாடி வெளுத்து வாங்கியதாக வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார். அப்படிப்பட்டவர் தற்போது பயிற்சியாளராக தமக்கு இந்திய அணியில் ஆதரவளிப்பது குறித்து சுந்தர் பேசியது பின்வருமாறு. “என்னைப் போலவே அவரும் தன்னுடைய ஜெர்ஸி எண்ணை ஐந்தாக கொண்டிருந்தார்”
பயிற்சியாளராக ஆதரவு:
“இடது கை பேட்ஸ்மேனான அவர் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். ஐபிஎல் தொடரில் அவருக்கு எதிராக பவுலிங் செய்ததை நான் விரும்பவில்லை. எனக்கு எதிராக அவர் சூப்பராக வெற்றிகரமாக செயல்பட்டவர்களில் ஒருவர். நல்ல மனிதரான அவர் எங்கள் அனைவர் மீதும் எந்த சூழ்நிலையிலும் போராடி வெல்ல முடியும் என்ற நம்பிக்கை வைத்துள்ளார்”
இதையும் படிங்க: ஒரு காலத்தில் என்னை வெளுத்து வாங்கிய கம்பீர்.. இப்போ இந்திய அணியில் எனக்கு சப்போர்ட் பன்றாரு.. சுந்தர் பேட்டி
“எனவே தொடரின் முடிவில் அவர் மகிழ்ச்சியானதைப் பார்த்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது. தொடர் முழுவதும் எங்களுடைய அணியை அமைதியாக வைத்திருந்ததற்கான பாராட்டுக்களை கில், கம்பீர் ஆகியோருக்கு கொடுக்க வேண்டும். அவர்கள் எங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதில் தெளிவான தகவலைக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் இருவருமே எங்கள் வீரர்கள் மீது நிறைய தன்னம்பிக்கையை வைத்துள்ளார்கள். அது எங்களுக்கு பெரிய திரையில் உதவியது” என்று கூறினார்.



