இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் அந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக எதிர்காலத்தில் இந்திய அணியின் நிரந்தர வீரராக மாறுவார் என்றும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். அதேவேளையில் சாய் சுதர்சனின் பேட்டிங் டெக்னிக் 3 விதமான ஃபார்மேட்டிற்கும் பொருந்தும் வகையில் உள்ளதாகவும் பல்வேறு ஆதரவுகள் அவருக்கு குவிந்து வந்தன.
சாய் சுதர்சன் அந்த இடத்திற்கு சரியாக பொருந்துவார் : அஷ்வின் நம்பிக்கை
பின்னர் ஐ.பி.எல் தொடர் முடிந்த கையோடு முதல் முறையாக இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்த அவர் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்த தொடரின் முதல் போட்டியிலேயே அறிமுக வாய்ப்பை பெற்ற அவர் முதல் போட்டியில் சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த போட்டியோடு நீக்கப்பட்டார். பின்னர் அவரது இடத்தில் களமிறங்கிய கருண் நாயர் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சொதப்பியதால் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் மீண்டும் மூன்றாவது வீரராக சாய் சுதர்சன் விளையாடி வருகிறார்.
அப்படி தனக்கு கிடைத்த இந்த இரண்டாவது வாய்ப்பில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் 151 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரியுடன் 61 ரன்கள் குறித்து அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் இனியும் தொடரும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாய் சுதர்சனின் இந்த ஆட்டம் குறித்து பாராட்டி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் :
கருண் நாயர் இதற்கு முன்னதாக எப்பொழுதுமே மூன்றாம் இடத்தில் விளையாடியதில்லை. ஆனால் சாய் சுதர்சன் அந்த இடத்தில் சரியாகப் பொருந்துவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணி இந்த தொடரில் பின்னடைவை சந்தித்திருந்த இவ்வேளையில் மூன்றாம் இடத்தில் களமிறங்கி அவர் ஒரு சிறப்பான அரைசதத்தை அடித்துள்ளார். இதன்மூலம் அவரால் பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிகாட்டியுள்ளார்.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு விழுந்துள்ள அடி மேல் அடி.. பும்ராவை தொடர்ந்து சிராஜுக்கும் பிரச்சனை – இதை கவனிச்சீங்களா?
என்னை பொறுத்தவரை சாய் சுதர்சனிடம் இருக்கும் திறமைக்கு நிச்சயம் டிராவிட் மற்றும் புஜாரா போன்று இந்திய அணியின் மூன்றாம் இடத்தில் பெரிய வீரராக மாறுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பேட்டிங்கில் நல்ல டெக்னிக்கை வைத்திருக்கும் அவர் நிச்சயம் மூன்றாவது இடத்திற்கான சரியான வீரர் என்ற நம்பிக்கையை கொடுக்க முடியும். இனிவரும் காலத்தில் அவர் தனது முழு திறனையும் வெளிப்படுத்துவார் என்று அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



