லீட்ஸ் நகரில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 471 ரன்களை குவித்து வலுவான துவக்கத்தை அளித்தது. அதன் பின்னர் தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதலாவது இன்னிங்சை சற்று நிதானமாக விளையாடி வருகிறது.
பும்ரா தான் இந்தியாவின் ஆல்டைம் மிகச்சிறந்த பவுலர் : ரவி சாஸ்திரி
இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா போட்டியில் இரண்டாம் நாளன்று 12 ஓவர்கள் வீசி 48 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெடுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது பந்துவீச்சு இங்கிலாந்து அணி வீரர்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்தது.
அதோடு மட்டுமின்றி பென் டெக்கெட் கொடுத்த எளிதான கேட்சை ரவீந்திர ஜடேஜா கோட்டை விட்டார். அதேபோன்று ஹாரி ப்ரூக் விக்கெட்டை எடுத்தாலும் அது நோபாலாக அமைந்தது. அதுமட்டுமின்றி பல கேட்ச்களை அவரது பந்துவீச்சில் இந்திய வீரர்கள் தவறவிட்டனர். இப்படி பல விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்பை பும்ரா இழந்திருந்தார்.
இந்நிலையில் இந்தியா கண்டெடுத்த மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றால் அது ஜஸ்ப்ரீத் பும்ரா தான் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் கபில் தேவுடன் தான் இணைந்து விளையாடி இருந்தாலும் அவரை விட ஜஸ்ப்ரீத் பும்ராவே காலத்திற்கும் சிறந்த பவுலர் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்தியாவின் கிரேட்டஸ்ட் பாஸ்ட் பவுலர் என்றால் அதில் எவ்வித சந்தேகமும் இன்றி நான் பும்ராவின் பெயரை கூறுவேன். ஏனெனில் நான் கபில் தேவுடன் விளையாடி உள்ளேன். ஆனால் அவர் வித்தியாசமானவர். அவரை விட பும்ரா மிகச் சிறப்பானவர். ஏனெனில் பும்ராவால் எந்த ஒரு அணிக்கு எதிராகவும், எந்த ஒரு மைதானத்திலும், எந்த ஒரு ஃபார்மேட்டிலும் விக்கெட்டை வீழ்த்த முடியும். இப்படி ஒரு திறன் கொண்ட வீரர் கிடைப்பது அரிது. அந்த வகையில் தான் பும்ரா தனித்துவமாக திகழ்கிறார்.
இதையும் படிங்க : இந்தியாவில் பண்ணத விட ஒருபடி மேல.. நிச்சயம் ஜெய்ஸ்வால் அதை செய்து காட்டுவார் – கவாஸ்கர் நம்பிக்கை
அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரான மார்க்கம் மார்ஷல் பேட்ஸ்மேன்களின் மனநிலையை புரிந்து கொண்டு பந்து வீசக்கூடியவர். அவரைப் போன்றே பும்ராவிற்கும் அந்த திறமை இருக்கிறது. அதோடு புதுப்பந்தில் வேகத்துடன் ஸ்விங் செய்வதிலும் சரி, பழைய பந்தில் ஸ்விங் செய்வதிலும் சரி பும்ரா தனித்துவமானவர் எனவே பும்ராவை தலைசிறந்த பவுலர் என்று தான் கூறுவதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



