பெரிய ஆசை இல்லை, மெகா ஏலத்தில் 8 கோடிகள் கிடைத்தால் போதும் – இந்திய வீரரின் ஆசை

IND
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பங்கேற்கும் 590 வீரர்களை தங்கள் அணிக்கு வாங்க 10 அணிகளும் பல கோடி ரூபாய்களுடன் போட்டி போட உள்ளதால் இந்த ஏலத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

IPL
IPL Cup

இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் கிளன் மேக்ஸ்வெல் மற்றும் இளம் வீரர் முகமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தக்க வைத்துள்ளது. இருப்பினும் அந்த அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி கடந்த வருடம் அந்த பதவியில் இருந்து விலகியதால் அந்த அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி அந்த அணி ரசிகர்களிடையே நிலவி வருகிறது.

- Advertisement -

கலக்கல் சஹால் :
முன்னதாக பெங்களூரு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அந்த அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் யூஸ்வென்ற சஹால் ஐபிஎல் 2022 சீசனுக்கான பெங்களூர் அணியில் தக்க வைக்கப்படவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் வாங்கியது. அப்போது முதல் அந்த அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் கடந்த சீசன் வரை அந்த அணியின் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக வலம் வந்தார்.

chahal

குறிப்பாக பெங்களூரு அணியின் சொந்த மைதானமான சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் அவர் மிகச் சிறப்பாக பந்து வீசி வந்தார். ஏனெனில் பொதுவாகவே மற்ற மைதானங்களை காட்டிலும் அளவில் சிறியதாக இருப்பதுடன் தொட்டாலே சிக்ஸர்கள் பறக்கக்கூடிய பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் எப்போதுமே பேட்டர்கள் தான் கொடிகட்டி பறப்பார்கள். அப்படிப்பட்ட சவால் மிகுந்த சின்னசாமி மைதானத்தில் அபாரமாக பந்துவீசி பல வெற்றிகளில் பங்காற்றிய அவர் பெங்களூர் அணிக்காக 113 போட்டிகளில் விளையாடி 138 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

- Advertisement -

வருத்தத்தில் சஹால்:
இந்நிலையில் தன்னை தக்கவைக்காமல் பெங்களூரு அணி நிர்வாகம் விடுவித்துள்ளது பற்றி தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யூடியூப் சேனலில் யூஸ்வென்ற சஹால் கூறியது பின்வருமாறு. “பெங்களூரு அணிக்காக விளையாட எனக்கு விருப்பம் உள்ளது. ஏனெனில் அந்த அணியில் கடந்த 8 வருடங்களாக விளையாடினேன். ஆனால் அதற்காக மற்ற அணிக்கு விளையாட சென்றால் அங்கு நான் மோசமாக உணர்வேன் என அர்த்தமில்லை. இது மெகா ஏலம் என்பதால் அனைவரும் ஏலத்தொகையில் கவனம் செலுத்துவார்கள். எப்போதும் எனது 100% அர்ப்பணிப்பை கொடுப்பேன். எந்த புதிய அணிக்கு நான் விளையாட சென்றாலும் அங்கு என்னை உட்படுத்திக் கொள்ள சில நேரம் மட்டுமே தேவைப்படும். அதனால் தான் நம்மை தேர்ச்சியான கிரிக்கெட் வீரர்கள் என கூறுகிறோம்” என கூறியுள்ளார்.

chahal

ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாட விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ள சஹால் ஒருவேளை அது நடக்கவில்லை என்றால் தன்னை தேர்வு செய்யும் புதிய அணியில் மகிழ்ச்சியுடன் விளையாட தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். பெங்களூரு அணியில் சிறப்பாக விளையாடிய பின்புதான் இந்திய அணியில் அவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது என்பதாலேயே பெங்களூர் அணி மீது அவருக்கு தனி மரியாதை உள்ளது. இருப்பினும் சமீபகாலங்களாக சஹால் நல்ல பார்மில் இல்லாத காரணத்தால் அவரை பெங்களூர் அணி தக்கவைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

8 கோடிகள் போதும்:
“எனது திறமையை நிரூபிக்க தேவையான வாய்ப்பை பெங்களூரு அணி தான் அளித்தது. அந்த அணியில் எனது பயணத்தை தொடங்கிய போது மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அதற்கு முன்னதாக ஒரு சில ரஞ்சி கோப்பை போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தேன். ஆனால் ஐபிஎல் தொடரில் விளையாடியதால் தான் இதுபோன்ற சவால் மிகுந்த டி20 தொடரில் என்னால் தாக்கு பிடிக்க முடிகிறது” என இதுபற்றி மேலும் தெரிவித்துள்ள யூஸ்வென்ற சஹால் பெங்களூரு அணியில் விளையாடியது ஒரு நல்ல கிரிக்கெட்டராக வளர உதவியதாக கூறியுள்ளார்.

Chahal

அந்த உரையாடலின்போது மெகா ஏலத்தில் எவ்வளவு கோடிகள் சம்பளமாக எதிர்பார்க்கிறீர்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் எழுப்பிய கேள்விக்கு சஹால் அளித்த பதில் பின்வருமாறு. “எனக்கு 15 – 17 கோடிகள் வேண்டும் என்று நான் கூறமாட்டேன். எனக்கு 8 கோடிகள் போதுமானது” என கூறியுள்ளார். கடைசியாக கடந்த 2021 சீசனில் அவர் 6 கோடிகளுக்கு பெங்களூர் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement