முன்னேறத்தை நோக்கி ரிஷப் பண்ட் – சாதூரியத்தால் ரிவியூ செய்வதில் வெற்றி கண்ட 5 தருணங்கள்

Pant-1
- Advertisement -

சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் நவீன தொழில்நுட்பங்கள் வெற்றியில் மிகப் பெரிய பங்காற்ற கூடியதாக உருவெடுத்துள்ளது. அதிலும் ஒரு காலத்தில் சச்சின் மற்றும் இந்தியாவுக்கு எதிராக வேண்டுமென்றே தவறான தீர்ப்புகளை வழங்கிய ஸ்டீவ் பக்னர் போன்ற மோசமான நடுவர்களால் ஒரு அணி பாதிக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் வழங்கும் திருப்தியளிக்காத தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறை கொண்டுவரப்பட்டது. ஆரம்ப காலங்களில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் நாளடைவில் 90% தருணங்களில் அது வெற்றியில் முக்கிய பங்காற்றக்கூடியதாக உருவெடுத்துள்ளது.

பரபரப்பான தருணங்களில் நடுவர் கொடுக்கும் தீர்ப்பு சரியானதாக உணரவில்லையெனில் உடனடியாக பீல்டிங் செய்யும்போது அந்த அணியின் கேப்டன் 10 – 15 நொடிகளில் ரிவ்யூ எடுக்க வேண்டும். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ரிவியூ எடுப்பதில் கில்லாடியாக போற்றப்படுகிறார்.

- Advertisement -

ஏற்கனவே நல்ல அனுபவம் பெற்ற அவர் விக்கெட் கீப்பராக இருப்பதால் அம்பயர் பார்க்கும் அதே கோணத்தில் பார்த்து எது சரியான முடிவு என்பதை கணப்பொழுதில் கணித்து அம்பயர் கொடுக்கும் தவறான தீர்ப்புகளை எதிர்த்து ரிவியூ எடுத்து வெற்றி காண்பார். அதனாலேயே நிறைய ரசிகர்கள் முன்னாள் வீரர்களும் டிஆர்எஸ் முறையை தோனி ரிவியூ சிஸ்டம் என்று பாராட்டுவார்கள்.

முன்னேறும் பண்ட்:
மேலும் கேப்டன் மறு பரிசீலனை செய்வதற்கு அதை சிறந்த கோணத்தில் பார்க்கும் விக்கெட் கீப்பரின் ஆலோசனை அவசியமாகிறது. அந்த வகையில் தோனிக்கு பின் இந்தியாவின் விக்கெட் கீப்பராக விளையாடி வரும் ரிஷப் பண்ட் ஆரம்ப கட்டத்தில் பேட்டிங் போலவே ரிவியூ எடுப்பதிலும் சொதப்பினார். அதனால் அவர் ஆலோசனை கூறினால் ரிவ்யூ எடுக்கக் கூடாது என்ற வகையில் நிறைய ரசிகர்கள் ஏன் கேப்டன் ரோகித் சர்மாவே ஒரு தருணத்தில் அவரை கலாய்த்தார். ஆனால் நாளடைவில் பேட்டிங்கை போலவே ரிவ்யூ எடுப்பதிலும் முன்னேறி வரும் அவர் சமீப காலங்களில் தனது சாதுர்யத்தால் எடுத்த 5 வெற்றிகரமான ரிவியூக்களைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

5. கைரன் பொல்லார்ட்: கடந்த 2019இல் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 95/9 ரன்களுக்கு சிறப்பாக பந்துவீசி இந்தியா மடக்கியது. அப்போட்டியில் கடைசி ஓவரில் நவ்தீப் சைனி வீசிய புல் டாஸ் பந்து பொல்லார்ட் கால்களில் பட்டது.

இருப்பினும் லெக் ஸ்டம்ப் தவறியிருக்கும் என்று கருதிய நடுவர் அவுட் கொடுக்காத நிலையில் விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணியினரும் வலுவாக அவுட் கேட்கவில்லை. ஆனால் அதை பின்புறமிருந்து சரியான கோணத்தில் பார்த்த ரிஷப் பண்ட் விராட் கோலியிடம் ரிவியூ எடுக்குமாறு கேட்டுக் கொண்டதில் சோதிக்கப்பட்ட அந்த தீர்ப்பின் இறுதியில் பொல்லார்ட் 49 ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

4. டேவிட் வார்னர்: 2020 ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ – டேவிட் வார்னர் 10 ஓவர்கள் வரை வெளுத்து வாங்கி ரன்களை சேர்த்தனர். அப்போது அமித் மிஸ்ரா வீசிய 10-வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்ற டேவிட் வார்னர் அதை தவறவிட்டதுடன் எட்ஜ் கொடுத்தார்.

அதை கச்சிதமாக பிடித்த போதிலும் நடுவர் அவுட் கொடுக்காத நிலையில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரிடம் அவுட் தான் என்று ரிஷப் பண்ட் உறுதியாக தெரிவித்தார். அதன்பின் ரிவ்யூ எடுத்ததில் எட்ஜ் வாங்கியது தெளிவாக தெரிந்ததால் வேறு வழியின்றி நடுவர் அவுட் கொடுத்தார்.

- Advertisement -

3. ஜாக் கிராவ்லி: கடந்த 2021இல் இங்கிலாந்து மண்ணில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ட்ரென்ட் பிரிட்ஜ் நகரில் நடந்த முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தின் ஜாக் கிராவ்லிக்கு எதிராக பந்துவீசிய முகமது சிராஜ் எட்ஜ் வாங்கியதாக உணர்ந்ததால் அவுட் கேட்டார். ஆனால் நடுவர் கொடுக்காத நிலையில் விராட் கோலியை சமாதானப்படுத்திய சிராஜ் ரிவியூ எடுக்க வைத்ததில் இந்தியா தோற்றது.

இருப்பினும் அதே ஓவரின் கடைசி பந்தில் கிராவ்லி மீண்டும் எட்ஜ் வாங்கினார். ஆனால் இம்முறை அவுட் இருக்காது என்று இந்திய வீரர்கள் நினைத்தாலும் அந்த சத்தத்தை கேட்ட பண்ட் விடாப்பிடியாய் விராட் கோலியை எடுக்குமாறு கேட்டார். அதனால் கடைசி நொடியில் எடுக்கப்பட்ட ரிவியூவில் எட்ஜ் வந்ததைப் பார்த்த விராட் கோலியை ஆச்சரியப்பட்டு பண்ட்டை பாராட்டினார்.

2. டீ சில்வா: கடந்த பிப்ரவரியில் பெங்களூருவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷமியின் அனலான பந்துவீச்சில் திணறிய அந்த அணியின் தனஞ்சயா டீ சில்வா 12-வது ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கேட்கப்பட்டார். ஆனால் ஷமி வீசிய அந்த பந்து அதிகப்படியாக ஸ்விங் ஆகியிருக்கும் என்று நினைத்த அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

அதனால் கேப்டன் ரோகித் சர்மாவும் இந்திய அணியினரும் ரிவியூ எடுக்க யோசித்தனர். ஆனால் “நான் சொல்கிறேன், டிஆர்எஸ் எடுங்கள்” என்று அழுத்தமாக ரிஷப் பண்ட் கூறியததை நம்பி எடுத்த ரோகித் சர்மாவுக்கு இறுதியில் பரிசாக விக்கெட் கிடைத்தது.

1. டேரன் ப்ராவோ: கடந்த பிப்ரவரியில் அகமதாபாத் மைதானத்தில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 238 ரன்களை கட்டுப்படுத்தும் போது பிரசித் கிருஷ்ணா வீசிய 10-வது ஓவரில் அந்த அணியின் டேரன் ப்ராவோ எட்ஜ் கொடுத்தார். இருப்பினும் ரசிகர்கள் எழுப்பிய அதிகப்படியான சத்தத்தால் எட்ஜ் இல்லை என்று நினைத்த நடுவர் நிதின் மேனன் அவுட் கொடுக்க மறுத்தார்.

ஆனால் அந்தப் பந்தை பிடித்த ரிஷப் பண்ட் நிச்சயமாக அவுட் என்பதை உணர்ந்ததால் மீண்டும் ரோகித் சர்மாவை சமாதானப்படுத்தி ரிவியூ எடுக்க வைத்தார். அதை சோதித்து பார்க்கப்பட்டதில் ரிஷப் பண்ட் சரியாகத்தான் முடிவெடுத்துள்ளார் என்ற வகையில் இந்தியாவுக்கு விக்கெட் பரிசாக கிடைத்தது.

Advertisement