என்ன ஒரு ஆச்சர்யம், ஒரே நேரத்தில் ஐபிஎல் 2022 தொடரில் மீண்டும் ஜொலிக்க தொடங்கியுள்ள 3 பழைய வீரர்கள்

IPL 2022 3 Stars Shines Again After Long Time
Advertisement

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோலாகலமாக துவங்கி மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக ஐபிஎல் தொடர் என்றாலே அதில் பெரும்பாலும் இளம் வீரர்களும் வெளிநாடுகளிலிருந்து வரும் புதிய வீரர்களும் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் இந்த வருடம் ஐபிஎல் தொடர் துவங்கிய ஒருசில நாட்களிலேயே ஒருசில பழைய வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்படத் தொடங்கியுள்ளனர். இவர்களை இங்கு ஏன் பழைய வீரர்கள் என்று குறிப்பிடுகிறேன் என்றால் ஒரு காலத்தில் அபாரமாக செயல்பட்ட இவர்கள் சமீப காலங்களாக தங்களின் பார்ம்மை இழந்து சிறப்பாக செயல்பட முடியாமல் போனதன் காரணமாக “முடிந்து போன வீரர்கள்” என அச்சிடப்படாத முத்திரை குத்தப்பட்டனர்.

IPL

ஜொலிக்க தொடங்கியுள்ள 3 பழைய வீரர்கள்:
இருப்பினும் கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த உலக தரம் நிறைந்த வீரர்களுக்கு பார்ம் என்பது தற்காலிகமானது ஆனால் அவர்களின் கிளாஸ் என்பது நிரந்தரமானது என வல்லுநர்கள் கூறுவது உண்டு. அந்த வகையில் இந்த வருடம் இதுவரை நடந்த 3 போட்டிகளில் பழைய பன்னீர்செல்வமாக பழைய பார்முக்கு திரும்பியுள்ள 3 வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. எம்எஸ் தோனி: இந்தியாவுக்காக 3 வகையான உலக கோப்பைகளை வென்று மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ள முன்னாள் வீரர் எம்எஸ் தோனி கடந்த 2020இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வ பெற்ற போதிலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடினார். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டன்ஷிப் செய்து வந்த அவர் 4 கோப்பைகளை வென்று கொடுத்து ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

Dhoni 1

அதேபோல் பேட்டிங்கிலும் கடைசி நேரத்தில் களமிறங்கி சென்னை தோற்க இருந்த எத்தனையோ போட்டிகளில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து பல சரித்திர வெற்றிகளை பெற்று கொடுத்ததால் அவரை பினிசெர் என ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 300 – 400 ரன்களை அடித்து வந்த அவர் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல்முறையாக ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறியதுடன் தனது பார்ம்மையும் இழந்தார். அதன் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதவித்த சென்னை மாபெரும் அவமானத்தைச் சந்தித்தது.

- Advertisement -

அதன்பின் 2021 ஐபிஎல் தொடரில் அதைவிட மோசமாக விளையாடிய அவர் வெறும் 114 ரன்களை மட்டுமே எடுத்தார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டதாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாத காரணத்தாலும் 40 வயதைக் கடந்து விட்ட காரணத்தாலும் அவரை “முடிந்து போன பினிசெர்” என பல ரசிகர்கள் கிண்டலடித்தனர். அப்படிப்பட்ட நிலையில் கொல்கத்தாவுக்கு எதிராக இந்த வருடம் நடந்த முதல் போட்டிக்கு முன்பாக காலம் காலமாக வகித்து வந்த சென்னை கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து அவரின் கீழ் முதல் முறையாக ஒரு சாதாரண வீரராக விளையாடினார்.

MS Dhoni 2022 IPL

அந்த போட்டியில் 62/5 என தடுமாறிய சென்னை 100 ரன்களை தொடுமா என்ற கேள்வி எழுந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கிய எம்எஸ் தோனி ஆரம்பத்தில் மெதுவாக விளையாடினாலும் கடைசியில் 38 பந்துகளில் 50* ரன்கள் அடித்து 2 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒரு அரைசதம் அடித்து பார்முக்கு திரும்பினார். இதன் காரணமாக 20 ஓவர்களில் 131/5 ரன்களை எடுத்த சென்னை படுமோசமாக தோற்காமல் ஓரளவு சுமாரான தோல்வியை சந்தித்தது. இருப்பினும் நீண்ட நாள்கள் கழித்து முதல் போட்டியிலேயே ஜொலிக்க தொடங்கிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இந்த வருடம் இன்னும் அவர் குறைந்தது 13 போட்டிகளில் விளையாடுவார் என்பதால் கண்டிப்பாக நிறைய ரன்கள் அடிப்பார் என நம்பலாம்.

- Advertisement -

2. உமேஷ் யாதவ்: ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் தொடர்ச்சியாக 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துகளை வீசி எதிரணிகளுக்கு அச்சுறுத்தலை கொடுத்துவந்த உமேஷ் யாதவ் அதன் காரணமாக இந்திய அணியில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு முன்னணி பவுலராக வலம் வந்தார். அதன்பின் சுமாராக செயல்படத் தொடங்கிய இவர் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அதே காரணமாக ஐபிஎல் தொடரிலும் புறக்கணிக்கப்பட்ட அவர் இந்திய டெஸ்ட் அணியில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். இருப்பினும் அவர் மீது நம்பிக்கை வைத்த கொல்கத்தா அணி நிர்வாகம் இம்முறை நடந்த ஏலத்தில் 2 கோடிக்கு வாங்கி முதல் போட்டியில் வாய்ப்பையும் கொடுத்தது.

Umesh Yadav

அதை கச்சிதமாக பயன்படுத்திய அவர் சென்னையின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் மற்றும் டேவோன் கான்வே ஆகியோரை சொற்ப ரன்களில் அவுட் செய்து கொல்கத்தாவின் வெற்றிக்கு வித்திட்டார். அதிலும் 4 ஓவர்கள் வீசிய அவர் 20 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்த காரணத்தால் முதல் போட்டியின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அத்துடன் இதுவரை மொத்தம் 9 ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையும் படைத்துள்ளார்.

3. குல்தீப் யாதவ்: கடந்த 2018-ஆம் ஆண்டு வாக்கில் 3 வகையான இந்திய அணியிலும் முக்கிய சுழல் பந்து வீச்சாளராக உருவெடுத்த குல்தீப் யாதவ் கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளையாடினார். அதேபோல் ஐபிஎல் தொடரிலும் அபாரமாக செயல்பட்டு வந்த அவர் முதல் முறையாக கடந்த 2019-ஆம் ஆண்டு மோசமாக பந்து வீசியதால் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியான வாய்ப்புகளை பெற முடியாமல் தவித்தார். அதே காரணமாக இந்திய அணியில் இருந்து தூக்கி எறியப்பட்ட அவரை கொல்கத்தா அணி நிர்வாகமும் கழட்டி விட்ட நிலையில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் டெல்லி அணி அவரை வாங்கியது.

Kuldeep-1

அந்த நிலையில் வலுவான மும்பை அணிக்கு எதிராக நடந்த போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து அபாரமாக பந்துவீசிய அவர் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கைரன் பொல்லார்ட் உட்பட 4 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அந்த போட்டியில் போட்டியில் வெற்றி பெற்ற டெல்லியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். தற்போது 27 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு விரைவில் இந்திய அணியில் மீண்டும் காலடி பதித்தார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Advertisement